Thursday, March 17, 2011

வெஜ்ஜிடபில் சப்பாத்தி ரோல்

உஸ்ஸ்ஸ்ஸ் ..... அப்பாடா. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வழியா டைம் கிடைத்திருக்கு. இந்த பதிவை நான் இரண்டு நாளைக்கு முன்பே செய்து இருக்க வேண்டியது . என் வீட்டு அரை டிக்கெட் செய்த லீலையால் கொஞ்சம் லேட். என் பொண்ணுக்கு என் மேல என்ன கோபம்னு தெரியல. இந்தா வெச்சுக்கோன்னு ஸ்பேஸ் -பார் பட்டன்-ஐ பிச்சு கைலே கொடுத்திட்டா. அதை ஒட்ட வெச்சு நான் ரெடியாக 2 நாள் ஆயிடுச்சு.

சரி மேட்டர்-ருக்கு வருவோம். என் வீட்டு பக்கத்துல இருக்கும் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் -ல தான் இதை முதன் முதலாய் ருசி பார்த்தேன். டேஸ்ட் நாக்கிலே ஒட்டிகிச்சு. ரொம்ப சீக்கிரமா வேலை முடிந்து விடும்.

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 6
காரட் - 3
(காலிப்ளவர், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி போன்ற எளிதில் வேக கூடிய காய்கறிகளை உங்கள் வசதிக்கேற்ப சேர்த்து கொள்ளுங்கள்)
சோம்பு - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
(உங்களுக்கு சிக்கன் மசாலா, கரம் மசாலா பிடிக்கும் என்றால் ஒவ்வொன்றும் கால் ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள் )
உப்பு, தண்ணீர் , எண்ணெய் தேவைகேற்ப


செய்முறை:
1 . காய்கறிகளை கழுவி பொடியாக அறிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
2 . அடிபிடிக்காத பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பை அதில் சேர்க்கவும் .
3 . சோம்பு பொரிந்ததும் (எந்த ரி -ன்னு தெரியல கொஞ்சம் அஜீஸ் பண்ணிகோங்க. தெரிஞ்சவங்க எனக்கு கமெண்ட்-ல சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்) , நறுக்கிய காய்களை போட்டு லேசாக வதக்கவும். இப்போது எல்லா பொடிகளையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
4 . தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைத்து விடவும். தண்ணீர் சுத்தமாக வற்றிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.


ரோல் செய்ய:
சப்பாத்தி (கோதுமை அல்லது மைதா மாவில் செய்தது)
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
துருவிய காரட் - ஒன்று
எலும்பிச்சை சாறு - இரண்டு ஸ்பூன்

1 . சப்பாத்தியின் நடுவில் சமைத்த காய்கறிகளை வைத்து, அதன் மேல் வெங்காயம், காரட், கால் ஸ்பூன் எலும்பிச்சை சாறு (ஒரு சப்பாத்திக்கு இந்த அளவு )தூவி , படத்தில் உள்ளது போல் ரோல் செய்து சூடாக பரிமாறலாம்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...