Wednesday, September 14, 2011

முருங்கை தொக்கு

ரசம் சாதம் / சப்பாத்திக்கு உகந்த சைடு டிஷ். என் அம்மாவிடம் இருந்து கற்றுகொண்ட குறிப்பு இது.  


தேவையான பொருட்கள்:

முருங்கை - 2 (சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்)\
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு, சோம்பு, கருவேப்பிலை - கொஞ்சம்
வெங்காயம் - பெரியது ஒன்று - நீளமாக  நறுக்கியது
தக்காளி - பெரியது ஒன்று - நீளமாக நறுக்கியது
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
உப்பு , மஞ்சள் தூள், எலுமிச்சை பழச்சாறு - கொஞ்சம்

அரைக்க:

தேங்காய் துருவல் / பல் - ஒரு கைப்பிடி
சோம்பு - அரை ஸ்பூன்
பூண்டு - 1
வறுத்த நிலக்கடலை - கொஞ்சம் (optional )
மிளகாய் வத்தல் - 2
(லேசாக நீர் விட்டு நன்கு மையாக அரைத்து கொள்ளவும்)

செய்முறை:


 முருங்கை மூழ்கும் அளவு நீர் விட்டு, கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும். மீதி நீரை பின் வடித்து விடலாம்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சோம்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, பின் வேக வைத்த முருங்கை, சாம்பார் பொடி, உப்பு, இத்துடன் சேர்த்து கிளறி 5 நிமிடம் குறைந்த தணலில் சமைக்கவும்.


அரைத்த தேங்காய் விழுதை காயுடன் சேர்த்து கிளறி 2 நிமிடம் வேகவிடவும்.

அடுப்பை அணைக்கும் முன் மல்லிதழை, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

Monday, September 12, 2011

சிம்பிள் உருளைக்கிழங்கு ப்ரை



சப்பாத்தி/ வெரைட்டி ரைஸ்-க்கு  தொட்டு கொள்ள சீக்கிரமாய் சமைக்க கூடியது. வெங்காயம், தக்காளி எதுவும் நறுக்க தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் வெட்டினால் போதும்.

 
தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 5 ஸ்பூன்
உருளைக்கிழங்கு - கால் கிலோ (உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி கொள்ளவும் )
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் : மல்லி தூள் (1 : 1 1 /2 ) (அல்லது) மிளகு தூள் - உங்கள் கார விருப்ப அளவை பொருத்து. நான் மிளகு தூள் சேர்த்துள்ளேன்.
உப்பு, மல்லி இலை - தேவைக்கேற்ப
தேங்காய் பவுடர் (optional ) - 1 ஸ்பூன்

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருளைகிழங்கை சேர்த்து லேசாக வதக்கவும். இதன் மேல் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் (அ) மிளகு தூள் , உப்பு சேர்த்து கிளறவும். தேவைபட்டால் கால் டம்ளர் நீர் விட்டு கிளறினால் உப்பு, காரம் சீராக இருக்கும்.

குறைந்த தணலில் 10 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். (உருளை கிழங்கை பெரிதாக நறுக்கி இருந்தால் வேக சற்று நேரம் பிடிக்கும்).
 

மல்லி தலை, தேங்காய் பவுடர் சேர்த்து இறக்கி விடலாம்.

Wednesday, September 7, 2011

வறுத்து அரைத்த சிக்கன் கிரேவி

 
தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - பொடியாக அரிந்தது - 3
தக்காளி - பொடியாக அரிந்தது - 4
இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - இரண்டு ஸ்பூன்
மல்லி தூள் - மூன்று ஸ்பூன்
சீரக தூள் - இரண்டு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
கிராம்பு - 4
சோம்பு, மிளகு - அரை ஸ்பூன்
பட்டை, பிரிஞ்சி இலை, ஸ்டார் பிரிஞ்சி, ஏலக்காய் - 3 சிறிய பீஸ்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
(மேற்சொன்ன அனைத்தையும் எண்ணெய் விடாமல் வறுத்து தேங்காய் துருவலுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து வைத்து கொள்ளவும்)
தாளிக்க :
சமையல் எண்ணெய் - 7 ஸ்பூன்
கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
செய்முறை:
  1. கடாயில் எண்ணெய் விட்டு, கடு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
  2.  
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி நீர் விட்டு நன்கு கூழ் ஆகும் வரை வதக்கவும்.
  4.  
  5. சிக்கனை சுத்தம் செய்து, கழுவி இத்துடன் சேர்த்து வதக்கவும். பின் அணைத்து பொடி வகைகள் + உப்பு சேர்த்து 15 -20 நிமிடம் மிதமான சூட்டில் மூடி போட்டு சமைக்கவும். தண்ணீர் விட தேவையில்லை.
  6.  
  7. சிக்கன் நீர் விட்டு நன்கு வெந்திருக்கும். இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து கிளறி 5 நிமிடம் சமைக்கவும்.
அரிந்த கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள்.... கம கம சிக்கன் கிரேவி!

 
சென்ற வாரம் எங்கள் வீட்டில் நடந்த நட்பு விருந்தின் போது... மேற்சொன்ன அதே சிக்கன் கிரேவி வித் வெஜ் பிரயாணி!

Wednesday, May 11, 2011

ரவா புட்டு

புட்டு மேகர் இல்லாம குய்க்கா ஒரு புட்டு செய்து சாப்பிடலாம் வாங்க....

தேவையான பொருட்கள்:
  1. ரவை - ஒரு கப்
  2. தேங்காய் துருவல் - கால் கப்
  3. கிஸ்-மிஸ் பழம்+முந்திரி பருப்பு - கொஞ்சம்
  4. கொதிக்க வைத்த தண்ணீர் - 2 கப் (இதை முதல் வேலையாக செய்து வைத்து கொண்டு களத்தில் இறங்குங்கள் !)
  5. சீனி - அரை கப் (உங்கள் தேவைகேற்ப கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)
  6. நெய் - 6 ஸ்பூன்
செய்முறை:
 ஒரு நாண்-ஸ்டிக் கடாயில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு முந்திரி பருப்பு + கிஸ்-மிஸ் பழம் சேர்த்து வறுத்து கொள்ளுங்கள். கடைசியாக தேங்காய் துருவலையும் சேர்த்து லேசாக வதக்கி வைத்து கொள்ளுங்கள். 


அதே கடாயில் 2 ஸ்பூன் நெய்விட்டு ரவையை வறுக்கவும். ரவை வறுபட்டதும் கால் டம்ளர் கொதிக்க வைத்த சூடான தண்ணீரை சேர்த்து கட்டி சேராமல் கிளறுங்கள். தண்ணீர் வற்றியதும் திரும்ப கால் டம்ளர் சுடுநீர் சேர்த்து கட்டி சேராமல் கிளறுங்கள். இது போல் ரவை வேகும் வரை செய்யவும். தேவைபட்டால் கொஞ்சம் நெய் சேர்த்து கொள்ளுங்கள்.
கொதிக்க வைத்த மொத்த நீரையும் யூஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல, ரவை வெந்ததும் நிறுத்தி விடுங்கள்.  4  - 5 முறை நீர் சேர்த்து வதக்கியதுமே ரவை வெந்து விடும். இது சிம்பிள் தான்.

அடுப்பை அணைத்து விட்டு, தேங்காய் துருவல், சீனி, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாக கிளறுங்கள். அவ்ளோதான் புட்டு ரெடி.
சூடா சாப்டாலும் சரி / ஆறியபின் சாப்பிட்டாலும் சரி, சுவையா இருக்கும்.
என் பொண்ணுக்கு இந்த இனிப்பு ரொம்ப பிடித்தது.  அவளால் அப்படியே சாப்பிட முடியாது (இப்போ தான் ஒரு வயதை நெருங்குகிறாள்), வெறும் ரவை போர்ஷனை மட்டும் சுவைத்து சாபிட்டா.... 

Monday, May 9, 2011

வெங்காய குழம்பு

கொஞ்சம் கார சாரமா சாப்பிடுற ஆளா நீங்க? அப்போ கண்டிப்பா உங்களுக்கு இந்த ரெசிபி பிடிக்கும்.


 தேவையான பொருட்கள்:
  1. நல்லெண்ணெய் - 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
  2. கடுகு, உளுந்து, கருவேப்பில்லை - கொஞ்சம்
  3. வெந்தயம் - கால் ஸ்பூன் (optional)
  4. பெரிய வெங்காயம் - 2  பொடியாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கியது
  6. மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  7. புளி - நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
  8. உப்பு
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
  • வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
  • தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேசன்.

ஒரு டவுட்:  இந்த குழம்பை ரசம் மாதிரி தண்ணியா வெச்சு, வெண்பொங்கலுக்கு சைடு டிஷ்-ஆ யாராவது சாப்பிட்டு இருக்கீங்களா? எப்படி இருக்கும்? சமீபத்தில், டிவியில் ஒரு பிரபல சமையல் நிபுணர் இந்த டிப்ஸ் கொடுத்தாங்க.

Thursday, May 5, 2011

புதினா சட்னி & புதினா சப்பாத்தி ரோல்

எப்போ பாத்தாலும் இட்லி - சட்னி, தோசை - சட்னி சாபிட்டு போர் அடிக்குது. ஒரு சேஞ்ச்-க்கு புதினா சட்னி வெச்சு சப்பாத்தி ரோல்  பண்ணலாம்னு ட்ரை செஞ்சேன். என் கணவருக்கும் இந்த காம்பினேசன் பிடித்திருந்தது (நம்மாளுக்கு சப்பாத்தின்னு பேப்பர்ல எழுதி குடுத்தா கூட சாபிட்டுருவாரு......... ஆனாலும் என் கணவர் ரொம்ப நல்லவருங்க.... அவ்வ்வ்வ்)


புதினா சட்னி:
 
புதுசா நான் இத உங்களுக்கு கற்று கொடுக்கணும்னு அவசியம் இல்ல, நிறைய பேர் இந்த ரெசிபி பதிவு செய்து இருகாங்க (அப்பாடா  தப்பிச்சோம்டா  சாமி-ன்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது). ஆனாலும் என் செய்முறையை சுருக்கமா சொல்லலாம்னு நினைக்கிறன் (கொசு தொல்ல தாங்க முடியலப்பா.......)
 
தேவையான பொருட்கள்:
  1. உளுத்தம் பருப்பு - 4  ஸ்பூன்
  2. கடலை பருப்பு - 2  ஸ்பூன்
  3. புதினா ஒரு கட்டு (இலைகளை மட்டும் ஆய்ந்து, தண்ணீரில் கழுவி  சுத்தம் செய்து கொள்ளவும்)
  4. பச்சை மிளகாய் - 5
  5. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
  6. பூண்டு - 4  பல்
  7. இஞ்சி - சிறிய துண்டு
  8. தேங்காய் துருவல் - 1 /4 கப்
  9. உப்பு
  10. எண்ணெய் - 2  ஸ்பூன்
  11. சீனி -அரை ஸ்பூன்
 செய்முறை:
  • கடாயில் 2  ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் பொன்னிறமாக  வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
  • அதே கடாயில் உப்பு, சீனி, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • வதக்கிய புதினா ஆறியதும், தேங்காய் துருவல், உப்பு, வருத்த பருப்புகள் சேர்த்து மையாக அரைத்து கொள்ளுங்கள்.
  • கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த சட்னி-யை அரை ஸ்பூன் சீனி சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். சீனி சேர்ப்பதால் சட்னி நிறம் மாறாமல் இருக்கும், அரைத்த பின் வதக்குவதால் 3 -4  நாள் பிரிட்ஜில் ஸ்டாக் வைத்து கொள்ளலாம் + சப்பாத்தியில் தடவும் போது சப்பாத்தி ரோல் நீர்த்து (ஒரு மாதிரி நீர் கோர்த்து அந்த இடத்தை சுற்றி கொஞ்சம் லூசாக இருக்கும்)  போகாது.


புதினா சப்பாத்தி ரோல்:
 
தேவையான பொருட்கள்:
புதினா சட்னி
பொடியாக நறுக்கிய வெங்காயம்
துருவிய காரட்
லெமன் ஜூஸ்
 
ரோல் செய்ய:
புதினா சட்னியை சப்பாத்தி நடுவில் தடவி, நறுக்கிய வெங்காயம், துருவிய காரட் ஸ்டப் செய்து, அரை ஸ்பூன் லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்யவும். சூடாக பரிமாறவும். 

Tuesday, April 26, 2011

தக்காளி சட்னி


தேவையான பொருட்கள்:
 
எண்ணெய் - 4 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3
பூண்டு (பெரிய பல்) - 4
இஞ்சி - 2 துண்டு (2 பெரிய பல் பூண்டிற்கு சமமாக)
புதினா இலை - ஒரு கை
மல்லி தழை - ஒரு கை
பச்சை மிளகாய் - 2   (அல்லது) வறமிளகாய் - 3 .
கருவேப்பிலை - ஒரு கை
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு
தேங்காய் துருவல் (அல்லது) பொடியாக நறுக்கிய தேங்காய் பல் - 1 /4 கப் (தேங்காயை பற்களாக நறுக்கி போடுவதை விட துருவி சேர்த்தால் சட்னி ஒரே சீராக இருக்கும்)
 
செய்முறை:
 
  1. புதினா, மல்லி, கருவேப்பிலை இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி வைத்து கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் உப்பு, தேங்காய் துருவலை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
  3. 2 நிமிடம் கழித்து உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது தக்காளி நீர் விட்டு நன்றாக வதங்கும்.
  4. 3 நிமிடம் கழித்து தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.  
  5. ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்தெடுங்கள். கம கம தக்காளி சட்னி ரெடி.
 
தோசை, இட்லி, தயிர் சாதம் இவற்றுடன் பரிமாறலாம்.

Wednesday, April 20, 2011

பால் பாயசம் - செய்முறை(1 )

 என்னடா புத்தாண்டு வாழ்த்து மட்டும் சொல்லிட்டு ரெசிபி தராம போய்டாளே-ன்னு பார்தீங்களா. மதுரை சித்திரை திருவிழா-காக புத்தாண்டு அன்று குடும்பத்தோடு கிளம்பி விட்டோம் (என் கணவர் ஊர் மதுரை). மதுரை சித்திரை திருவிழா முதன் முறையா பார்கிறேன், அப்பப்பா கொள்ளை அழகு. திருவிழாவை பற்றி  உங்களோடு பகிர்ந்து கொள்ள நிறைய விஷயங்கள் புகைப்படத்தோடு சேகரித்து உள்ளேன், விரைவில் அந்த பதிவை எதிர் பாருங்கள்.
திருவிழா முடிந்து அம்மா வீட்டுக்கும் (காரைக்குடி) வந்தாச்சு !! என் குழந்தையை குளிபாட்டுவதில் இருந்து தூங்க வைக்கும் வரை எல்லாத்தையும் அம்மா-விடம் outsource செய்துவிட்டு சந்தோசமாக நாட்களை நகர்த்தி  கொண்டிருகிறேன்.
ஓகே ஓகே சொந்த கதை சோக (சந்தோஷ ryt?? ) கதையை விட்டுட்டு ரெசிபி-க்கு வருவோம்.



அது என்ன செய்முறை(1 )? அப்போ செய்முறை(2 ) வேற இருக்கானு question வந்துருச்சா? வெரி குட். இது சேமியாவில் செய்தது. அரிசியிலும் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் போடி - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6 )

செய்முறை:

  1. பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
  2. 3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து  கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
  3. பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால் திரிஞ்சு போயிடுச்சுனா, அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
  4. 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும்.  சூடாக / குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

என் அம்மா மீன் வறுக்கும் வாசனை மூக்கை துளைக்குது. bye bye! 

Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

உங்கள் வருகைக்கு நன்றி. புத்தாண்டு பலகாரம் எடுத்துகோங்க !

Wednesday, April 13, 2011

பருப்பு உருண்டை குழம்பு


என்னுடைய favorite ரெசிபி. பார்க்கும் போதே சாப்பிடனும்னு தோணுதா......  
 
தேவையான பொருட்கள்:
நலெண்ணெய் - 4  ஸ்பூன்
கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை - கொஞ்சம்
சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 2 கை
பொடியாக நறுக்கிய தக்காளி - 4
புளி கரைசல் - அரை கப்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மல்லி தூள் , மிளகாய் தூள் - தலா 1  1 /2  ஸ்பூன்
உப்பு
மல்லி தழை - கொஞ்சம்
 
பருப்பு உருண்டை பிடிக்க:
15 நிமிடம் நீரில் ஊற வைத்த கடலை பருப்பு - 3 /4  கப்
பொடியாக அறிந்த வெங்காயம் - 6 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 /2  ஸ்பூன்
உப்பு
 
15 நிமிடம் கழித்து பருப்பு கழுவி நீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் விட தேவை இல்லை. மற்ற சாமான்களை பருப்புடன் சேர்த்து பிசைந்து உருண்டை பிடித்து வைத்து கொள்ளவும்.
 
செய்முறை:
  • கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுந்து , வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். வெந்தயம் சேர்பதால் குழம்பு வாசனை வீட்டையே தூக்கும் !!!
  • இப்போ வெங்காயம், தக்காளி சேர்த்து நல்லா வதக்குங்க. அப்புறம் புளி கரைசல், மஞ்சள் தூள், மல்லி + மிளகாய் தூள், உப்பு + 4 கப் தண்ணீர் எல்லாவற்றையும் ஒரே ஷாட்டில் சேர்த்துடுங்க.
  • குழம்பு நல்லா கொதிக்கும் போது உருட்டி வெச்சிருக்கும் பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக போடுங்க.
  • உருண்டை வெந்ததும் (இதை செக் பண்ண ஒரு உருண்டையை எடுத்து அமுக்கி பாருங்க.அதுக்காக அமுக்கி அமுக்கி எல்லா உருண்டையையும் பிச்சுடாதீங்க!) அடுப்பை அணைத்து விட்டு மல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
டிப்ஸ் டிப்ஸ்: பருப்பை அரைத்த மிக்சி, உங்கள் கை இரண்டையும் கொஞ்சம் தண்ணீரில் கழுவி அந்த தண்ணீரை குழம்பு கொதிக்கும் போது சேர்த்தால் குழம்பு கெட்டியா, வாசனையா இருக்கும்.


Saturday, April 9, 2011

Egg சப்பாத்தி ரோல்

என்றைக்கெல்லாம் எனக்கு சீக்ரம் தூக்கம் வருதோ அன்றைக்கெல்லாம் இது தான் எங்க வீட்டு டின்னர் (இந்த சப்பாத்தி-ய மட்டும் என்  கணவர்-கிட்ட இருந்து பிரிக்க முடியல. இல்லேன்னா தோசை-ய சுட்டு குடுத்துட்டு சீக்கிரம் kitchen-ஐ மூடிவிடலாம்-ன்னு ரொம்ப பீல் பண்ணுவேன்).
ரொம்ப பெரிய வேலையெல்லாம் இல்லீங்க. முட்டை பொரியல் செய்து கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங்குடன் பரிமாற வேண்டியது தான்.

தேவையான பொருட்கள்
  1. எண்ணெய் - 4  ஸ்பூன்
  2. கடுகு, உளுந்து, கருவேப்பிலை - கொஞ்சம்
  3. பெரிய வெங்காயம் - 2  - பொடியாக அரிந்தது
  4. பச்சை மிளகாய் - 1
  5. முட்டை - 3
  6. மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  7. உப்பு
  8. மிளகு தூள் - 2  ஸ்பூன்
செய்முறை
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • முட்டை அனைத்தையும் உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வேகும் வரை வதக்கவும்.
  • கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம்.

ம்ம்ம்ம் இப்போ மெயின் மேட்டர்-ருக்கு வருவோம்.

ரோல் செய்ய:
  • சப்பாத்தி
  • லெமன் ஜூஸ்
  • பொடியாக அரிந்த வெங்காயம்
  
ஒவ்வொரு சப்பாத்தி நடுவிலும் முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து படத்தில் இருப்பது போல் ரோல் செய்து பரிமாறவும்.

Thursday, April 7, 2011

செட்டிநாடு காலிப்ளவர் பருப்பு சூப்


கல்யாணத்துக்கு பின் முதல் தடவையா இந்த சூப் செய்த பொது என் கணவர் என்னை ரொம்ப கிண்டல் பண்ணினார். மஞ்ச கலர்-ல ஒரு தண்ணிய குடுத்து இத சூப்-ன்னு சொல்றியே-மா?-ன்னு கேட்டார். பொதுவா சூப்-னா நிறைய வெஜ்ஜிடபில், கார்ன் போட்டு வடிச்ச கஞ்சி மாதிரி கெட்டியா இருக்கும், அல்லது தக்காளி நிறைய போட்டு ரெட் கலர்-ல இருக்கும்.
ஆனா எங்க ஊரு பருப்பு சூப் துவரம் பருப்பு, நெய் சேர்த்து ஹெல்தி-யா செய்தது. பெரிய ஹோட்டல்-ல சாப்பிடுற வரைக்கும் சூப்-ன்னா எங்க ஊரு துவரம் பருப்பு சூப் மட்டும் தான் எனக்கு தெரியும்.  ஒரு தடவை இத ட்ரை பண்ணுங்க அப்புறம் சோள கஞ்சி சூப்பை நினைத்து கூட பாக்க மாட்டீங்க.
 
தேவையான பொருட்கள்:
 
  1. துவரம் பருப்பு - அரை கப் (சூப் திக்கா இருக்க கூடாது). பருப்பை கழுவி 10 நிமிடம் நீரில் ஊற போடவும்.
  2. காலிப்ளவர் - ஒரு கை அளவு (பொதுவா எந்த காயும் இதிலே சேர்க்க மாட்டாங்க. நான் கொஞ்சம் ஆர்வ கோளாறில் காலிப்ளவர் போட்டுருக்கேன்)
  3. பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கியது
  4. தக்காளி - 2 நீளமாக நறுக்கியது
  5. பச்சை மிளகாய் - 3  நீளமாக நறுக்கியது
  6. மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
  7. கொத்தமல்லி - பொடியாக அரிந்தது - ஒரு கை
  8. உப்பு  
தாளிக்க:
நெய் - 3  ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் - தலா 1
சோம்பு - அரை ஸ்பூன்
கருவேப்பிலை - கொஞ்சம்
 
செய்முறை:
 
  • பிரஷர் குக்கர்-ரில் நெய் + எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்திருக்கும் பொருட்களை போடவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
  • ஊற வைத்த பருப்பில் இருந்து  தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
  • கழுவிய காலிப்ளவர், மஞ்சள் தூள்,3 கப் தண்ணீர்,  உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
  • விசில் அடங்கியதும் குக்கரை திறந்து கொத்தமல்லி இலை, தேவையான அளவு தண்ணீர் (சூப் தண்ணியா இருந்தா தான் டேஸ்ட்-டா இருக்கும்) சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
இது காலிப்ளவர் போடாத சூப்.
 
குறிப்பு: ஈவினிங் டிபன்-னா அப்டியே குடிக்கலாம். இல்லேன்னா சாதத்துல போட்டும் சாப்பிடலாம்.

Friday, April 1, 2011

பிரிஞ்சி சாதம் / Birinji Rice

இந்த போட்டோவோட ஒரு மூலையில் ஒரு பிரிஞ்சி இலை தெரியுதே, அதுனால இதுக்கு பிரிஞ்சி சாதம்-ன்னு பேரு வெச்சிருக்கேன்-ன்னு நினைக்காதீங்க. பொதுவா தேங்காய் பாலில் செய்த வெரைட்டி ரைஸ்-க்கு இந்த பேரு வெக்கிறாங்க, இந்த சாதம் தேங்காய் பாலில் செய்தது. சிலர் இதுல காய்கறி,மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து பிரியாணி மாதிரி செய்றாங்க. என்னோடது ரொம்ப சிம்பிள் வெர்சன்-ங்க. தேவையான பொருட்கள்:

  1. எண்ணெய் அல்லது நெய் - 4 ஸ்பூன்

  2. பிரிஞ்சி இலை - 2

  3. சோம்பு - ஒரு ஸ்பூன்

  4. ஏலக்காய் - 2

  5. கிராம்பு - 6 (வேற எந்த கார சாமான்களும் சேர்க்க போவது இல்லை. எனவே உங்கள் கார அளவை பொருத்து கிராம்பு கூட்டி/குறைத்து கொள்ளுங்கள்)

  6. பட்டை - 1 பீஸ்

  7. அன்னாசி பூ, ஸ்டார் பிரிஞ்சி போன்றவையும் உங்கள் விருப்பம் போல் சேர்த்து கொள்ளுங்கள்

  8. அரிசி - ஒரு கப் (பாஸ்மதி / நார்மல் சாப்பாடு அரிசி எது வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்)

  9. தேங்காய் பால் - 2 1 /2 கப்

  10. 2 ஸ்பூன் பாலில் ஊற வைத்த 3 -4 இதழ் குங்கும பூ (அல்லது) 2 ஸ்பூன் நீரில் கரைத்த கால் ஸ்பூன் கேசரி பவுடர்

  11. நெய்யில் வருத்த முந்திரி பருப்பு & கிஸ்மிஸ் - கொஞ்சம்

  12. உப்பு

செய்முறை:



  • அரிசியை கழுவி 5 நிமிடம் ஊற வைத்து கொள்ளுங்கள். குக்கர்-ரில் எண்ணெய்/நெய் விட்டு காய்ந்ததும் எண் 2 -7 -ல் உள்ள அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.

  • ஒரு நிமிடம் கழித்து, தண்ணீரை நன்றாக வடித்து விட்டு அரிசியை சேர்த்து, அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும் வரை வதக்கவும். தேங்காய்பால் உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வைக்கவும். விசில் வராவிட்டாலும் பரவாயில்லை, விசில் வந்தால் ஒரு விசில் போதும்.

  • பிரஷர் அடங்கியதும் குங்கும பூ/கேசரி பவுடர்-ஐ சாதம் நடுவில் மட்டும் ஊற்றவும். வருத்த முந்திரி & கிஸ்மிஸ்-ஐ மேலே கொட்டி மூடி விடவும். முடிந்தால் 1 நிமிடம் மிதமான தீயில் வைக்கலாம்.

  • 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து சாதத்தை நன்றாக கிளறிவிட்டு சூடாக பரிமாறுங்கள்.

குறிப்பு: தயிர் பச்சடி, சால்னா, காரமான சிக்கன் / காய்கறி கூட்டு இவற்றுடன் சுவையாக இருக்கும்.

Tuesday, March 29, 2011

பூண்டு புளி குழம்பு

இந்த பெயரை கேட்டாலே ஒரே குஜால்ஸ் தான். அவ்வளவு சுவையான ரெசிபி. நல்லா சூடா சாதம் வெச்சி உருளைகிழங்கு பொரியல்-ஐ தொட்டுகிட்டு சாப்பிட்டா.... இஷ்ஷ்ஷ்ஷ் அமிர்தம் தான் போங்க. தேவையான பொருட்கள்:

  • முதல்ல ரெசிபி நாயகன் பூண்டு - பத்து அல்லது பதினைந்து பல் நல்லெண்ணெய் - ஆறு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை - கொஞ்சம்

  • வெந்தயம் - ஒரு ஸ்பூன்

  • சின்ன வெங்காயம் - ஒரு கை நிறைய. (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் ஒன்று)

  • தக்காளி - பெரியது ஒன்று

  • மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

  • மல்லி தூள் - 1 ஸ்பூன்

  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்)

  • அரிசி மாவு - 2 ஸ்பூன்

  • உப்பு
செய்முறை

  1. தக்காளி, வெங்காயம் இரண்டையும் மிக்சி-யில் நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை சேர்க்கவும்.

  3. கடுகு பொரிந்ததும் பூண்டு பற்களை சேர்க்கலாம். இரண்டு நிமிடம் பூண்டு வதங்கியதும் அரைத்த வெங்காயம் தக்காளி சேர்க்கவும்.

  4. பச்சை வாடை போனதும் மஞ்சள், மிளகாய், மல்லி தூள்கள் + உப்பு சேர்க்கவும். பின் இரண்டு கப் தண்ணீர் விடவும்.

  5. தண்ணீர் நன்றாக வற்றி அல்லது பூண்டு வெந்ததும், அரிசி மாவை கால் கப் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.

  6. இரண்டு நிமிடம் கழித்து மல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.

Friday, March 25, 2011

இடியாப்பம் - முட்டை கறி

பேரு தான் முட்டை கறின்னு போட்டிருக்கு, ஆனா முட்டையவே காணம்னு பாக்கறீங்களா? இது உடைச்சு ஊற்றின முட்டை கறி.
இந்த காம்பினேசன் எங்க செட்டியார் (என் கணவர்) கண்டுபிடிச்சது.

தேவையான பொருட்கள்
முட்டை - இரண்டு
எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை - தாளிக்க
பெரிய வெங்காயம் - ஒன்று பொடியாக நறுக்கியது
தக்காளி - இரண்டு பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
உப்பு -கொஞ்சம்
எலும்பிச்சை சாறு - 3 ஸ்பூன்

செய்முறை
1 . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, சோம்பு , கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
2 . வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளி வதக்கும் போது கொஞ்சம் உப்பு சேர்த்தால் தக்காளி சுலபமாக வதங்கும்.
3 . மஞ்சள், மிளகாய், மல்லி தூள் சேர்த்து கிளறவும். 2 கப் தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்றாக கொதிக்க விடவும். இப்போது முட்டை உடைத்து ஊற்றி விடலாம். முட்டை ஊற்றியபின் கொஞ்ச நேரம் கிளற வேண்டாம்.
4 . பத்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு உப்பு, எலும்பிச்சை சாறு சேர்த்து கிளறவும். முட்டை கறி ரெடி !!!

குறிப்பு
முட்டை உடைத்து ஊற்றிய பின் அடுப்பை மிதமான சூட்டிற்கு குறைத்து விடவும்.

Friday, March 18, 2011

மிளகு காளான் / பெப்பர் மஸ்ரூம்

எங்க செட்டியாருக்கு (காரைக்குடி பக்கம் கணவரை இப்படிதான் சொல்லுவாங்க) ரொம்ப பிடிச்ச ரெசிபி -ங்கோ !!!

காளானை இந்த முறையில் செய்யும் போது கூடுதல் ருசியாக இருக்கும். மிளகு காரம் உடலுக்கு நல்லது.

தேவையான பொருட்கள்:


எண்ணெய் தேவையான அளவு
கடுகு, உளுந்து, கருவேப்பிலை
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு
பச்சை மிளகாய் நறுக்கியது - 1
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு தூள் - இரண்டு ஸ்பூன்
காளான் - நறுக்கியது - 250 கிராம்
உப்பு தேவையான அளவு
இந்த செய்முறைக்கு தண்ணீர் தேவை இல்லை

செய்முறை:


கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடவும். பின்பு கடுகு, உளுந்து, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.


பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
நறுக்கிய காளான் -ஐ இதோடு சேர்த்து வதக்கவும்.


இரண்டு நிமிடம் கழித்து காளான் நன்றாக தண்ணீர் விடும். இப்பொழுது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, மூடி விடவும்.


ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை காளான்-ஐ நன்கு கிளறி விடவும். 15 நிமிடத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றி விடும்.


இப்போது அடுப்பை அணைத்து விட்டு மிளகு தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டால் வேலை முடிந்தது !!!! :)

குறிப்பு :
தயிர் சாதம், லெமன் சாதம், சப்பாத்தி இவற்றுடன் மிக நன்றாக இருக்கும்.

Thursday, March 17, 2011

வெஜ்ஜிடபில் சப்பாத்தி ரோல்

உஸ்ஸ்ஸ்ஸ் ..... அப்பாடா. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வழியா டைம் கிடைத்திருக்கு. இந்த பதிவை நான் இரண்டு நாளைக்கு முன்பே செய்து இருக்க வேண்டியது . என் வீட்டு அரை டிக்கெட் செய்த லீலையால் கொஞ்சம் லேட். என் பொண்ணுக்கு என் மேல என்ன கோபம்னு தெரியல. இந்தா வெச்சுக்கோன்னு ஸ்பேஸ் -பார் பட்டன்-ஐ பிச்சு கைலே கொடுத்திட்டா. அதை ஒட்ட வெச்சு நான் ரெடியாக 2 நாள் ஆயிடுச்சு.

சரி மேட்டர்-ருக்கு வருவோம். என் வீட்டு பக்கத்துல இருக்கும் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் -ல தான் இதை முதன் முதலாய் ருசி பார்த்தேன். டேஸ்ட் நாக்கிலே ஒட்டிகிச்சு. ரொம்ப சீக்கிரமா வேலை முடிந்து விடும்.

தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 6
காரட் - 3
(காலிப்ளவர், உருளை கிழங்கு , பச்சை பட்டாணி போன்ற எளிதில் வேக கூடிய காய்கறிகளை உங்கள் வசதிக்கேற்ப சேர்த்து கொள்ளுங்கள்)
சோம்பு - கால் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
தனியா தூள் - அரை ஸ்பூன்
(உங்களுக்கு சிக்கன் மசாலா, கரம் மசாலா பிடிக்கும் என்றால் ஒவ்வொன்றும் கால் ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள் )
உப்பு, தண்ணீர் , எண்ணெய் தேவைகேற்ப


செய்முறை:
1 . காய்கறிகளை கழுவி பொடியாக அறிந்து எடுத்து வைத்து கொள்ளவும்.
2 . அடிபிடிக்காத பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பை அதில் சேர்க்கவும் .
3 . சோம்பு பொரிந்ததும் (எந்த ரி -ன்னு தெரியல கொஞ்சம் அஜீஸ் பண்ணிகோங்க. தெரிஞ்சவங்க எனக்கு கமெண்ட்-ல சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன்) , நறுக்கிய காய்களை போட்டு லேசாக வதக்கவும். இப்போது எல்லா பொடிகளையும் சேர்த்து லேசாக வதக்கவும்.
4 . தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைத்து விடவும். தண்ணீர் சுத்தமாக வற்றிய பின் அடுப்பை அணைத்து விடலாம்.


ரோல் செய்ய:
சப்பாத்தி (கோதுமை அல்லது மைதா மாவில் செய்தது)
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
துருவிய காரட் - ஒன்று
எலும்பிச்சை சாறு - இரண்டு ஸ்பூன்

1 . சப்பாத்தியின் நடுவில் சமைத்த காய்கறிகளை வைத்து, அதன் மேல் வெங்காயம், காரட், கால் ஸ்பூன் எலும்பிச்சை சாறு (ஒரு சப்பாத்திக்கு இந்த அளவு )தூவி , படத்தில் உள்ளது போல் ரோல் செய்து சூடாக பரிமாறலாம்.

Sunday, February 13, 2011

அவரைக்காய் கூட்டு


கொஞ்சம் கார-சார-மான ரெசிபி. சாதாரண அவரைக்காய் பொரியலை விட இந்த செய்முறையில் அவரைக்காய் ரொம்ப சுவையா இருக்குன்னு என் கணவர் சர்டிபிகேட் குடுத்தார்.

தேவையான பொருட்கள்

அவரைக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் -1 பெரியது
தக்காளி - 1 பெரியது
மஞ்சள் தூள் - கொஞ்சம்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை பழ சாறு - 2 ஸ்பூன்
உப்பு

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு, கருவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

  1. கொஞ்சம் அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. நறுக்கிய தக்காளியை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கவும். இப்போது கொஞ்சம் உப்பு சேர்த்து கொண்டால் தக்காளி சுலபமாக வதங்கும்.
  4. அவரகாயை சேர்த்து ஒரு வதக்கு வதக்கிய பின் மஞ்சள் தூள், மிளகாய் தூளை சேர்க்கவும். இத்துடன் கொஞ்சம் உப்பு, 3 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து விடவும்.
  5. தண்ணீர் நன்கு வற்றும் வரை காயை வேக விடவும். இப்போது எலுமிச்சை பழ சாரை சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
  6. ரசம் சாதம் / தயிர் சாதம் / சப்பாத்தி - உடன் பரிமாறலாம்.

Friday, February 11, 2011

பீன்ஸ் பருப்பு மசியல்

என் கணவர் சரியான சப்பாத்தி பிரியர். எனக்கும் சப்பாத்தி-கும் ஆகாது !!! ( என்ன ஒரு ஜோடி பொருத்தம் இல்ல :) ) . அதுனால சப்பாத்தி-க்கு சைடு டிஷ் தயாரிக்கும் பொது அது நமக்கும் வேலைக்கு ஆகுமா-ன்னு பார்த்து தான் செய்வேன். அப்டி கண்டு பிடிச்சது தான் இந்த பருப்பு மசியல்.
இது ஒரு மிக சுலபமான ரெசிபி. சப்பாத்தி, சாதம் இரண்டிற்கும் பரிமாறலாம்.



தேவையான பொருட்கள் :
பீன்ஸ் - கொஞ்சம் (நறுக்கியது )
துவரம் பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் -ஒன்று
தக்காளி - ஒன்று
உப்பு - தேவைக்கு ஏற்ப

தாளிக்க :
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
கடுகு , கருவேப்பில்லை - கொஞ்சம்

செய்முறை:
  1. கொஞ்சம் எண்ணெய் விட்டு பீன்சை லேசாக வதக்கவும் (பச்சை வாடை போவதற்கு)
  2. பருப்பு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் & மிளகாய் தூள், உப்பு, புளி + இரண்டு கப் தண்ணீர் , அனைத்தையும் பீன்சொடு சேர்க்கவும் . தக்காளி , மிளகாய் எல்லாம் நறுக்கனும்னு அவசியம் இல்ல. (காய், பருப்பை எல்லாம் கொஞ்சம் கழுவிட்டு போடுங்கப்பா !)
  3. நாலு இல்ல ஐந்து விசில் குக்கரில் வைக்கவும் (2-3 விசில் கூட போயிட்டாலும் பரவா இல்லை )
  4. குக்கர் விசில் அடங்கியதும் மூடிய திறந்து லைட்டா கடையனும்.
  5. கடைசியா மேல தாளிச்சு கொட்ட வேண்டியது தான்.

குறிப்பு:

  • காய் எதுவும் போடாம, வெறும் பருப்பு கடைந்தலும் சுவையா இருக்கும்.
  • பீன்ஸ்-கு பதிலா சவ்-சவ், முட்டைகோஸ் , புடலங்காய் சேத்துக்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...